உறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா
Cure for Insomnia
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்ராஸனம்
- ஜாலந்தரபந்தம்
- நபோமுத்ரா
- பஸ்த்ரிகாகும்பகம்
1. பத்ராஸனம்,
அத பத்ராஸனம்
குல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: /
பாதாங்குஷ்டௌ கராப்யாஞ்ச த்ரு’த்வா ச ப்ரு’ஷ்ட-தேச’த: // 2-9
ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச’கம் // 2- 10
மொழிபெயர்ப்பு
இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்டகோசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யவும். இந்த பத்ராஸனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

செய்நுட்பம்- (உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
- கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப்பிடிக்கவும்.
- மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச்சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யவும்.
- இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
- ஜாலந்தர முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.
2. பத்ராஸனத்தில் இருந்தபடியே
ஜாலந்தரபந்த:,
அத ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ரு’த்வா சிபுகம் ஹ்ரு’தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு’தே பந்தே ஷோடச’ாதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும்.
- தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
- மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு மூச்சை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
- இதை 21 முறைகள் செய்யுங்கள்.
3. பத்ராஸனத்தில் இருந்தபடியே
நபோமுத்ரா,
அத நபோமுத்ரா
யத்ர யத்ர ஸ்திதோ யோகீ ஸர்வகார்யேஷு ஸர்வதா /
ஊர்த்வஜிஹ்வ: ஸ்திரோ-பூத்வா தாரயேத் பவனம் ஸதா /
நபோமுத்ரா பவேதேஷா யோகீனாம் ரோகநாசி’னீ // 3-9
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி எங்கிருந்தாலும், எந்தச் செயல் செய்து கொண்டிருந்தாலும் எப்போதும் தம்முடைய நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைத்திருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, பிறகு மெதுவாக சுவாசத்தை வெளிவிட வேண்டும். இந்த நபோ முத்ரா, யோகிகளின் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.
செய்நுட்பம்
- நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைக்கவும்.
- கண்களை மூடி, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- பிறகு மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
- இதை 16 முறைகள் செய்யவும்.
4. பத்ராஸனத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,
அத பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75
ஏவம் விம்ச’திவாரம் ச க்ரு’த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச’ ஆரோக்யம் ச தினே தினே // 5.77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75
இவ்வாறு 20 முறைகள் செய்யவும். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.